Tuesday 4 November 2014

16.) தலைசுற்றும் தற்செயல்களும்; ஒப்பிடவியலா ஒற்றுமைகளும்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

              கடந்த பதிவின் இறுதி இணைப்பில் குறிப்பிட்டிருந்தவாறு, இந்தவாரம் "சம்பந்தமே இல்லாத இருவேறு நபர்களுக்குமிடையிலான நிகழ்வுகள், ஒரே போல் அமையுமா? அவ்வாறு விசித்திர நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றனவா?" காணலாம், இந்த வாரம்.

              ஏதேனும் இரண்டு நபர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் பட்டியல், ஓரளவிற்கு ஒத்திருந்தால், சாதாரணம். அதுவே தலைசுற்றுமளவிற்கு தற்செயல்களாக இருந்தால், அதற்கு 'அசாதாரணம்' என்பதைத் தவிர எப்பெயரும் பொருந்தாது. அத்தகைய அசாதாரணங்களில் சிலவற்றை இனி காண்போம்.

               என்றுமே ஒரு சாமானிய மனிதனைப் பற்றி முதலில் பேசினால், எவருக்கும் அதை அறிவதில் அத்தனை ஈடுபாடு வருவதில்லை. (நான் உட்பட!). ஆகவே முதலில் பிரபலங்களின் வாழ்கைப்பதிவுகளில் காணப்படும் ஆச்சர்யங்களைக் காண்போம், அவற்றைத் தொடர்ந்து மற்றவையும்.

1.) ஆபிரகாம் லிங்கனும் - ஜான் கென்னடியும்:



(ஆபிரகாம் லிங்கன்)


(ஜான் கென்னடி)

                 இவ்விரு அமெரிக்க அதிபர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒற்றுமைகளின் தொகுப்பு, இதோ உங்கள் பார்வைக்கு.
  1. 'லிங்கன்' (Lincoln), 'கென்னடி' (Kennedy) இரு பெயர்களும் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்கள்; தமிழில் நான்கு எழுத்துக்கள். ("இதுதான் நீ கண்ட ஒற்றுமையா?" அப்டின்னு சிரிக்கிறவங்களும் தொடர்ந்து படிங்க.)
  2. லிங்கன் 1860-லும் கென்னடி 1960-லும் ஜனாதிபதியானார்கள். இரு வருடங்களுக்குமான வித்தியாசம் சரியாக 100 ஆண்டுகள்.
  3. இருவரும் நீக்ரோ இனத்தாரின் உரிமைகளில் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்.
  4. இருவரும் தங்கள் மனைவியின் அருகிலிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  5. இருவருமே சுடப்பட்ட தினம் 'வெள்ளிக்கிழமை'.
  6. இருவருமே தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்து இறந்தனர்.
  7. இருவரின் மனைவியருக்கும், வெள்ளைமாளிகையில் வாழும்போது குழந்தை பிறந்து, பிறந்ததும் குழந்தை இறந்தது.
  8. லிங்கன் இறந்தது ஃபோர்டு (Ford) அரங்கத்தில், கென்னடி இறந்தது "லிங்கன்" என்ற பெயர் கொண்ட காரில், அக்காரைத் தயாரித்தது ஃபோர்டு மோட்டார் கம்பெனி.
  9. லிங்கனின் செயலாளரின் முன்பெயர் "ஜான்", கென்னடியின் செயலாளரின் பின் பெயர் "லிங்கன்".
  10. இருவரையும் கொன்ற "ஜான் வில்க்ஸ் பூத்" (John Wilkes Booth) மற்றும் "லீ ஹார்வி ஆஸ்வால்டு" (Lee Harvey Oswald) இருவரின் பெயர்களும் ஆங்கிலத்தில் 15 எழுத்துக்கள்.
  11. பூத் பிறந்தது 1839, ஆஸ்வால்டு பிறந்தது 1939. சரியாக 100 வருடம்!
  12. இருவருமே தென் மாநிலத் தீவிரவாதிகள்.
  13. பூத், லிங்கனை ஒரு அரங்கத்தில் கொன்றுவிட்டு, ஒரு கிடங்கை நோக்கி ஓடினான்; ஆஸ்வால்டு, கென்னடியை ஒரு கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு, ஒரு தியேட்டரை நோக்கி ஓடினான். 
  14. இருவரும் பிடிபட்டு, வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  15. லிங்கன், கென்னடி இருவரும் இறந்த பின்னர் "ஜான்சன்" என்ற பெயருடையவர்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றனர். ("ஆண்ட்ரூ ஜான்சன்" மற்றும் "லிண்டன் ஜான்சன்", முறையே)
  16. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808, லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக 100 வருடம்!
  17. இவர்கள் இருவரின் பெயர்களும் ஆங்கிலத்தில் 15 எழுத்துக்கள். (Andrew Johnson & Lyndon Johnson).
  18. மேலும், லிங்கன் முதல் முறை ஜனாதிபதி பதவிக்கு மனு போடும்போது, 'ஜான் கென்னடி' என்பவரை உபஜனாதிபதியாகப் பரிந்துரைத்திருந்தார்.
  19. அத்துடன், லிங்கன் உயிருடன் இருக்கும்போது, தனது இறப்பை கனவில் கண்டதாகவும்; கென்னடி ஒரு முறை ஒரு கல்லறைப் பகுதியை காரில் கடக்கும்போது, காரை நிறுத்தச் சொன்னவர், 'இந்த சூழ்நிலையிலேயே தங்கிவிடலாம் போல் உள்ளது' என தனது ஓட்டுனரிடம் கூறியதாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அவர்களது உள்ளுணர்வு உணர்த்திய ஒருவார காலத்தினுள் அவர்கள் உண்மையில் இறந்திருந்தனர்.
          இவைகள் தற்செயலா?

          'இருக்கலாம்' என்பவர்கள் மற்றவர்களைப்போல் மேலும் தொடரவும்.

2.) நெப்போலியனும் - ஹிட்லரும்:


(நெப்போலியன் போனபார்ட்)


(அடால்ஃப் ஹிட்லர்)

            இவ்விரு தலைவர்களின் வாழ்விலுள்ள ஒற்றுமைகளாவன:
  1. இருவருமே தலைமைப் பொறுப்பிற்கு வரும்முன் சாதாரண சிப்பாய்களாக அவரவர் நாட்டு இராணுவத்தில் பணியாற்றினர்.
  2. நெப்போலியன் பிறந்தது 1760-ல், ஹிட்லர் பிறந்தது 1889-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  3. நெப்போலியன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது 1804-ல், ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது 1933-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  4. நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல், ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம்.
  5. நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்தது 1812-ல், ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தது 1941-ல். சரியாக 129 ஆண்டுகள் வித்தியாசம். (இதே போல் இருவருக்குமான ஆண்டுகள்-வித்தியாச ஒற்றுமைகள் ஏராளம்.)
  6. இருவருமே காதல் திருமணம் செய்தவர்கள்.
  7. இருவருமே புகழின் உச்சத்தில் இருந்தபோது தோற்கடிக்கப் பட்டனர்.
  8. இருவரின் உயரங்களுமே ஆண்களின் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவு.
  9. இருவருமே மனோதிடம் மிக்கவர்கள் என்றும், இவர்களைத் தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுத முடியாது எனவும் வரலாற்று ஆய்வாளர்களால் இன்றளவும் வர்ணிக்கப்படுபவர்கள்.
  10. நெப்போலியனுக்கு புத்தகம் படிப்பதும், ஹிட்லருக்கு ஓவியம் வரைவதும் பொழுதுபோக்குகளாக இருந்தன. (இரண்டுமே உட்கார்ந்து பார்க்கும் வேலை)
  11. இருவரின் மரணமும் இயற்கை மரணம் அல்ல. நெப்போலியன், 'ஆர்செனிக்' (Arsenic) விஷம் வைத்து மெல்ல மெல்ல கொல்லப்பட்டார். ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
  12. இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனிக்கு நேச நாடாக விளங்கியது. அந்த இத்தாலி நாட்டுக் கொடியை வடிவமைத்தவர், நெப்போலியன்.
  13. இருவருமே நாடு பிடிப்பதில் முனைப்புடன் இருந்தனர்.
  14. இருவரும் இந்தியாவில் உருவான புத்தகத்தை எப்போதும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். (நெப்போலியன் - "மகாபாரதம்"; ஹிட்லர் - "பகவத் கீதை". இரு புத்தகங்களும் ஒரே விஷயத்தைச் சார்ந்தவை. [மதம் சார்ந்தும், கருத்து சார்ந்தும்] ஆனால் இருவரின் நோக்கங்கள் வேறுபட்டிருக்கலாம்)

(இத்தாலி நாட்டுக் கொடி)

              இதுவும் தற்செயலா?

              குழப்பத்தோடே மேலும் தொடர்வோம். இப்போது நம்மைப்போன்ற சாதாரண மக்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் காண்போம்.

3.) மும்மூர்த்திகள்:

               தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் 1920-ல் மூன்று ஆங்கிலேயர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அந்த இரயிலில் மொத்தமே இவர்கள் மூன்று பேர் மட்டும்தான். முதன்முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட அவர்கள், பெயர்களைப் பரிமாறும்போதுதான் ஆச்சரியம் காத்திருந்தது.

               அவர்களில், முதலாமவர் பெயர் "பிங்ஹம்", இரண்டாமவர் பெயர் "போவெல்", மூன்றாமவர் பெயர் "பிங்ஹம் போவெல்"!

4.) அதே ரத்தம், அப்படித்தான் இருக்கும்:

                "ஜேம்ஸ் ஸ்பைசட்" என்பவர் 1787-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஒரு யுத்தத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யுத்தகளத்தில் இறக்கும்போது அணிந்திருந்த அங்கியானது (Coat), அவரது அண்ணன் டானியலுடையது.

                 மூன்று வருடங்களுக்கு முன் நடந்த யுத்தத்தில், இதே அங்கியை அணிந்திருந்தபோதுதான் இருவரில் மூத்தவரான டானியல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

                  அந்த அங்கி மட்டுமல்ல, அப்போது அண்ணனைத் துளைத்த குண்டு சென்ற துவாரத்தின் வழியேதான், தம்பியின் உயிரைக்குடித்த குண்டும் ஊடுறுவியிருந்தது!

5.) ஏகப் பொருத்தம்:

                  நாற்பது வருடத்திற்கு முன் (கதைப்படி), இரட்டையர்கள், பிறந்த சிறிது நேரத்தில் வளர்வதர்காகக் கொடுக்கப்பட்டுவிட்டனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. வெவ்வேறு ஊர்களில் வளர்ந்தனர். 1979-ல், அவர்களுக்கு வயது இருக்கும்போது அவர்கள் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். தங்கள் வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இருவருக்கும் ஆச்சரியம். காரணம்,
  1. இருவருக்கும் "ஜேம்ஸ்" (James) என்று பெயர்.
  2. இருவரும் சட்ட மீறல் தடுப்புப் பணியில் இருந்தனர்.
  3. இருவருக்குமே சித்திரம் வரைவதிலும், தச்சு வேலைகளிலும் விருப்பம்.
  4. இருவரின் மனைவி பெயரும் "லிண்டா" (Linda).
  5. இருவருக்குமே ஒரே ஒரு மகன்.
  6. மகன்களின் மனைவியின் பெயர், "விண்டா" (Winda).
  7. இவர்கள் இருவருக்கும் ஒரே ஒரு மகன்.
  8. அந்த மகன்களின் பெயர், "ஜேம்ஸ் ஆலன்". (இரண்டாவது ஆலனுக்கு, பெயரில் ஒரு 'L' அதிகமாக வரும். [James Al(l)an])
  9. இரண்டு ஜேம்ஸும் விவாகரத்தாகி மீண்டும் திருமணம் செய்திருந்தனர்.
  10. அம்மனைவியரின் பெயர், "பெட்டி" (Betty).
  11. இருவரும் நாய் வளர்த்தார்கள்.
  12. அந்த நாய்களின் பெயர், "டைனி" (Tiny)! (நாய் கூடவா..?!)
           நம்பமுடிகிறதா உங்களால்?! இத்தகவல் 1980-ல், ஜனவரி மாதம் வெளியான "ரீடர்ஸ் டைஜஸ்ட்" (Readers' Digest) இதழில் வெளியானது.

           இதுபோன்ற நம்பமுடியாத விசித்திர ஒற்றுமைகள் நம்மைச்சுற்றிலும் ஏராளம். தேவைப்பட்டால், அவற்றை இரண்டாம் அத்தியாயமாகக் கொண்டு, பின்னர் காணலாம். "என்னமோ இப்போ தேவையான விஷயத்த சொன்ன மாதிரி, தேவைப்பட்டா பாக்கலாம்னு சொல்ற..?" எனக் கேட்கும் அன்பர்களுக்கு, நான் முன்னர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். "இப்பதிவுகள் நிச்சயம் ஏதாவதொரு வகையில் தொடர்புடையாதாயிருக்கும். அது நமக்கு நேரடியாக தொடர்பிருப்பதுபோலத் தோன்றவேண்டும் என்பதில்லை. ஒரு மரத்தின் கிளை, அதே மரத்தின் மற்றொரு கிளையுடன் தொட்டும் தொடாமல் இருப்பதுபோலத்தான் இதுவும்". நம்பவில்லை எனில், உங்களுக்காக ஒரு (செய்தித் துணுக்குடன் கூடிய) சிறு உதாரணப்படம்.


             சம்பந்தமே இல்லாத உதாரணம் போல் தோன்றுகிறது, அல்லவா?! விளக்குகிறேன். இன்றைய பதிவில், (தேவைக்கேற்ப) ஆபிரகாம் லிங்கனைப் பற்றிப் பார்த்தோம். ஆனால் அருகில் இருக்கும் லிங்கனின் தூரத்து உறவினரும், திரைப்பட நடிகருமான "டாம் ஹேங்க்ஸ்" (Tom Hanks)-ஐப் பற்றி இதற்கு முன் நமது பதிவில் குறிப்பிட ஏதேனும் தேவை ஏற்பட்டிருந்ததா, எனத் தேடினால். நிச்சயமாக குறிப்பிட்டிருக்கிறேன்; அதற்கு அவசியமும் இருந்திருக்கிறது! ஆனால் டாம் ஹேங்க்சைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை. (அதிகமாகக் குழப்புகிறேனா?!) 

            எனது முந்தைய பதிவுகளுள் "பிரபஞ்ச வரலாறு" என்கிற தலைப்பின் கீழ் இடப்பட்ட பதிவில் குறிப்பிட்டிருந்த, "டான் பிரவுன்" (Dan Brown)-ன் பிரதான கதாப்பாத்திரமான "ராபர்ட் லேங்க்டன்" (Robert Langdon)-னுக்கு திரையில் உருவமும், உணர்வும், உயிரும் கொடுத்தவர், இந்த டாம் ஹேங்க்ஸ்! இதை ஒருவித மறைமுகப் பிணைப்பாகக் கருதலாம்.


("Angels & Demons" திரைப்படத்தில், ராபர்ட் லேங்க்டனாக 'டாம் ஹேங்க்ஸ்')

            இதுபோன்ற ஒற்றுமைகள் சாத்தியமா? என்று பார்த்தால், எனது மானசீக குரு திரு.சுஜாதா கூறிய பதில் மட்டுமே நினைவிற்கு வருகிறது. அது "இது ஒரு நிகழ்தகவு போலத்தான். சிலருக்கு அதன் அளவு சற்று அதிகமாக இருக்கும். உங்களில் ஒருவர் உங்களது வாழ்விற்கும் ஒரு பிரபலத்தின் வாழ்விற்கும் உள்ள விஷயங்களில் நிச்சயம் பல ஒற்றுமைகள் காணப்படும்" என்றார். நானும் ஒரு நம்பிக்கையில் ஒரு மிக முக்கிய புராண கதாப்பாத்திரத்துடன் ஒரு ஆர்வத்தில் ஒப்பிட ஓரளவிற்கு ஒற்றுமையாகவே வந்தது! (அது என்ன கதாப்பாத்திரம்னுலாம் கேக்கக்கூடாது. அப்பறம் பிரச்சனையாகிடும். எனக்கு சொன்னேன்!)

            ஆனால், என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டீர்கள் எனில், இதுபோன்ற ஆச்சர்யங்கள் உண்மையாகவே நாம் அற்புதம் என நம்பும் நிலையைக் கொண்டிருக்க வாய்ப்புகளுள்ளது என்றே கூறுவேன். அதற்கான விளக்கங்கள் வழக்கம்போல் வரும் பதிவுகளில் பதிவிடப்படும். நான் பலரை மானசீக குருவாக ஏற்றிருந்தாலும், அவர்கள் கூறியவற்றை அப்படியே நம்பமாட்டேன். அப்பலரின் கருத்துக்களின் சில துளிகளின் கதம்பமாகவே எனது பாதைகளில் அலங்கரிக்க விரும்புகிறேன். ஆகவே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்தளவில் கூட இருக்க விரும்புவதில்லை. (கடைசிவரைக்கும் ஆடியன்ஸ் தான். ப்ளேயரே கிடையாது!)

            பிரபல எழுத்தாளரான "ஆர்தர் கோஸ்லர்" (Arthur Koestler), 'தி ரூட்ஸ் ஆஃப் கோயின்சிடன்ஸ்' (The Roots of Co-incidence) என்கிற நூலில் இத்தகைய தற்செயலான நிகழ்ச்சிகளுக்கு, ஒருவிதமான அறிவியல் ரீதியான (சற்று சிக்கலான) விளக்கம் தந்திருக்கிறார். 


(ஆர்தர் கோஸ்லர்)


            மேலும், அடுத்த வாரம் காணவிருக்கும் தலைப்பின், சிறு துப்பை (Clue), ஏற்கனவே இப்பதிவின் ஒரு ஓரத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதுவும் லிங்கனிடமே! அது, "கனவுகள் பலிக்குமா?" என்பது பற்றி. காத்திருங்கள் கனவுகளுடன்; காணலாம் அடுத்த வாரம்.

அதுவரை நன்றிகளுடன்,
             - அயலான்.



துணை நின்ற நூல்:

கடவுள் - சுஜாதா.


மேலும் விவரங்களுக்கு, காண்க:



Photo Courtesy:  Google.


பின் குறிப்பு: 
          பதிவுகள் தவிர்த்து மேலும் சில விந்தைகளைப் பற்றி அவ்வப்போது அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட இணைப்பு இட்டுச்செல்லும் பக்கத்தை "LIKE" செய்யவும்.


1 comment: